
சென்னை
இந்தியாவில் தில்லி, மும்பை, கல்கத்தா நகரங்களுக்கு அடுத்து பெரிய நகரம்.
தென் இந்தியாவின் நுழைவு வாயில். தமிழ்நாட்டின் தலைநகர். இந்தியாவின்
சிறந்த துறைக நகரங்களில் ஒன்று. 2000 ஆண்டுகள் பழமையாைனது. சிறந்த கலை,
கலாசார மற்றும் பண்பாட்டு மையமாக விளங்குகிறது. உலகின் இரண்டாவது நீண்ட,
அழகிய கடற்கரை (மெரினா) உள்ள நகரம். இந்திய நகரங்கள் மட்டுமல்லாமல் உலக
நாடுகளுடனும் சிறந்த போக்குவரத்துத் தொடர்பு.
பொதுத் தகவல்கள்
பரப்பளவு -174 சதுர கிலோ மீட்டர். மக்கள் தொகை - 70 லட்சம். உயரம் - கடல்
மட்டம். மழை அளவு - 1272 மி.மீட்டர் (ஆண்டு சராசரி). பேசப்படும் மொழிகள்-
தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, உருது, ஆங்கிலம்.
வரலாறு:
முற்காலத்தில் சிறுசிறு கிராமங்களை உள்ளடக்கியதாக இருந்த சென்னை நகரம்
தற்போது மாநகரமாக வளர்ந்துள்ளது. சோழர், பாண்டியர், பல்லவர்
காலத்திலிருந்து சிறந்த துறைமுக நகராக விளங்கி வருகிறது. வாசனைப்
பொருட்களுக்கும், துணி வகைகளுக்கும், முத்துக்களுக்கும் சிறந்து விளங்கிய
தமிழகத்துடன் கிரேக்கர்கள், சீனர்கள், ரோமானியர்கள் போன்ற வெளிநாட்டினர்
கடல் வணிகத் தொடர்பு வைத்துக் கொள்ள சென்னை ஒரு சிறந்த துறைகப்பட்டினமாக
விளங்கியது.
முதன்முதலாக போர்த்துகீசியர்கள் 16-ம் நூற்றாண்டில் சென்னைக்கு வந்தனர்.
அவர்களைத் தொடர்ந்து 1639-ம் ஆண்டு ஆங்கிலேயர் இங்கு வந்து வியாபாரம்
தொடங்கினர். ஆங்கிலேயர்கள் தங்கிய இடம் மெட்ராஸ்பட்டினம் என்று
அழைக்கப்பட்டது. 154-ல் ஆங்கிலேயர்கள் செயின்ட் ஜார்ஜ் கோட்டையைக்
கட்டினர். பின்னர் அருகில் இருந்த கிராமங்கள் எல்லாம் படிப்படியாக மெட்ராஸ்
பட்டினத்துடன் இணைந்தன. அப்பகுதி மெட்ராஸ் பிரசிடென்ஸி என்று
அழைக்கப்பட்டன.
தற்போது தனித் தனி மாநிலங்களாக உள்ள தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகம்,
கேரளம் ஆகியவற்றை உள்ளடக்கியதாக மெட்ராஸ் பிரசிடென்ஸி இருந்தது. மக்கள்
பேசும் மொழிக்கு ஏற்ப சுதந்திரத்துக்குப் பிறகு மெட்ராஸ் பிரசிடென்ஸி
தனித்தனி மாநலங்களாகப் பிரிக்கப்பட்டது.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் மிகச் சிறந்த நகரமாக சென்னை விளங்கியது.
இந்தியாவில் தங்கள் காலனி ஆதிக்கத்தை நிர்மாணிக்க சென்னை ஒரு முக்கிய
மையமாக இருந்தது. இங்கிருந்துதான் தென் கிழக்கு ஆசிய நாடுகளிலும் அவர்கள்
தங்களது காலனி ஆதிக்தத்தை விரிவுபடுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
மாநகரில் உள்ள முக்கிய இடங்கள்
செயின்ட் ஜார்ஜ் கோட்டை - ஆங்கிலேயர்களால் 1653-ல் கட்டப்பட்டது. தற்போது
இங்கு தமிழகச் சட்டப்பேரவையும், தமைமைச் செயலகம் உள்ளன. இங்கு ஒரு
அருங்காட்சியகம் உள்ளது. இக்கோட்டைக்குள் உள்ள செயின்ட் மேரிஸ் தேவாலயம்,
இந்தியாவில் உள்ள பழமையான தேவாலயங்களில் ஒன்று.
ஸ்ரீ பார்த்தசாரதி கோயில் - நகரின் மையப் பகுதியான திருவல்லிக்கேணியில்
உள்ளது. 8-ம் நூற்றாண்டில் பல்லவர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது.
சென்னையில் உள்ள மிகப் பழமையான கோயில்களின் ஒன்று. சிறந்த வைணவத் தலம்.
ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் - மயிலாப்பூரில் அமைந்துள்ள இக் கோயில் 350
ஆண்டுகள் பழமை வாய்ந்தது. 13-ம் நூற்றாண்டின் கட்டக் கலையை நினைவுகூறும்
வகையில் இக் கோயிலின் 37 மீட்டர் உயர கோபுரம் கட்டப்பட்டுள்ளது. சிறந்த
சைவத் திருத்தலங்களில் ஒன்று.
மெரினா கடற்கரை - சிமாநகரின் கிழக்கு எல்லையாக உள்ள இது உலகின் இரண்டாவது
அழகிய, நீண்ட கடற்கரையாகும். 13 கிலோமீட்டர் நீளமுள்ளது. தமிழக முதல்வர்கள்
மறைந்த அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர். ஆகியோரது சமாதிகள் இங்கு
அமைக்கப்பட்டுள்ளன. கடற்கரையோரமாக தமிழ் வளர்த்த ஒளவையார், திருவள்ளுவர்
வீரமானிவர், பாரதியார், பாரதிதாசன் ஆகியோரது சிலைகளும் கண்ணகி, காமராஜர்
ஆகியோரது சிலைகளும் வைக்கப்பட்டுள்ளன. தொழிலையும், தொழிலாளர்களையும்
நினைவுபடுத்தும் வகையில் உழைப்பாளர் சிலை வைக்கப்பட்டுள்ளது.
எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக மகாத்மா காந்தி சிலையும்
வைக்கப்பட்டுள்ளது. இச் சிலைக்கு அருகே கலங்கரை விளக்கம் உள்ளது. மெரினா
கடற்கரையில் அண்ணா நீச்சல் குளம், மெரினா நீச்சல் குளம், மீன் காட்சியகம்
ஆகியவையும் உள்ளன. நகரில் உள்ள சுற்றுலாத் தலங்களில் முதன்மையானது.
ஐஸ் ஹவுஸ் - மெரினா கடற்கரைக்கு எதிரே உள்ளது. ஆங்கிலேயர் ஆட்சிக்
காலத்தில் இங்கிலாந்திலிருந்து ஐஸ் கட்டிகள் கொண்டு வரப்பட்டு இங்கு
சேமித்து வைக்கப்பட்டதால் ஐஸ் ஹவுஸ் என்று அழைக்கப்பட்டது. இது தற்போது
விவேகானந்தர் இல்லம் என்று அழைக்கப்படுகிறது. இந்த கட்டடத்தை ராமகிருஷ்ண
மடம் பராமரித்து வருகிறது.
சாந்தோம் - மெரினா கடற்கரையின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ளது. சென்னை
மட்டுமல்ல ஆசியாவில் உள்ள பெரிய தேவாலயங்களில் ஒன்று. போர்த்துகீசியர்களால்
16-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த தேவாலயத்துக்கு ஏசு கிறிஸ்துவின்
சீடரான செயின்ட் தாமஸின் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
எல்லியட்ஸ் கடற்கரை - மெரினா கடற்கரையின் தெற்கு எல்லை இது. பெசன்ட் நகரில்
உள்ளது. இக் கடற்கரையில் அஷ்டலட்சுமி கோயிலும், வேளாங்கண்ணி மாதா கோயிலும்
உள்ளன. காதலர்கள் இங்கு அதிகம் வருவதால் காதலர் கடற்கரை என்று
அழைக்கப்படுகிறது.
அடையாறு ஆலமரம் -அடையாறு பகுதியில் அடையாறு ஆற்றின் கரையில் பிரம்மஞான சபை
வளாகத்தில் உள்ளது. 100 வயதுக்கும் மேலானது. ஆயிரக்கணக்கான விழுதுகள் மூலம்
இம் மரம் பல நூறு மீட்டருக்கும் அதிகமாக வளர்ந்து விரிந்துள்ளது. வயதான
காரணத்தால் பட்டுப்போன இம் மரத்தின் அடிப்பகுதி சமீபத்தில் வேறுடன்
பிடுங்கி வேறொரு இடத்தில் நடப்பட்டுள்ளது.
பிரம்மஞான சபை -அடையாறில் உள்ள பிரம்ம ஞான சபை அலுவலகம் தான், பிரம்மஞான
சபையின் சர்வதேசத் தலைமை அலுவலகமாகும். சுமார் 120 ஏக்கர் பரப்பளவு
கொண்டது. உலகின் சிறந்த ஆன்மிகத் தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றையும்,
அவர்களது போதனைளையும் விளக்கும் புத்தகங்கள் இங்குள்ள நூலகத்தில்
வைக்கப்பட்டுள்ளன.
கலாக்ஷேத்ரா -திருவான்மியூரில் அமைந்துள்ளது. சிறந்த கலைப் பயிற்சி மையமாக
விளங்குகிறது. 1936-ல் ருக்மணி தேவி அருண்டேல் என்பவரால் துவக்கப்பட்டது.
குருகுலக் கல்வி மூலம் நடனம், இசைப் பயிற்சி அளிக்கப்படுகிறது. உலக
நாடுகளில் இருந்து வந்து இங்கு மாணவர்கள் பயிற்சி பெறுகின்றனர்.
எம்.ஜி.ஆர். திரைப்பட நகரம் -திரைப்படத் துறையினர் படப்பிடிப்பு
நடத்துவதற்காக இது கட்டப்பட்டது. இங்கு பல ஸ்டுடியோக்களும் திரைப்படப்
பயிற்சிப் பள்ளியும் உள்ளன. தமிழ் படத்துறையினர் மட்டுமல்லாமல் தெலுங்கு,
கன்னடம், ஹிந்தி, ஆங்கிலப் படத் துறையினரும் இங்கு வந்து படப்பிடிப்பு
நடத்துகின்றனர்.
பிர்லா கோளரங்கம் - கோட்டூர்புரத்தில் உள்ள பெரியார் அறிவியல் மற்றும்
தொழில்நுட்ப மையத்தில் அமைந்துள்ளது. வானியல் பற்றிய ஒலி, ஒளி காட்சிகள்
காண்பிக்கப்படுகின்றன. கோளரங்கத்தின் மூலம் வான் ஆராய்ச்சியும், கோள்கள்
பற்றிய ஆராச்சியும் மேற்கொள்ளப்படுகிறது.
கருத்துகள்
கருத்துரையிடுக