குழந்தையின்மை என்பது பரம்பரையாக பாதிக்குமா? ஆமாம் என்றால் எப்படி அடுத்த சந்ததி தொடர்கிறது? தத்து எடுத்துக் கொள்கிறவர்களைத் தவிர, மற்றவர்களுக்கு வாரிசே இல்லாமல், அந்த சந்ததி அத்துடன் முற்றுப் பெற்றுவிடாதா? வாழைப்பழ காமெடி மாதிரியான ஒரு சந்தேகத்தை முன் வைத்து விளக்கம் வேண்டினார் சென்னையைச் சேர்ந்த வாசகி ஒருவர். பல்லாயிரம் பேரின் சந்தேகமான அதை குழந்தையின்மை சிகிச்சைக்கான சிறப்பு மருத்துவர் ஜெயராணியின் முன் வைத்தோம்.
"குழந்தையின்மைக்கான காரணங்களில் பரம்பரையாகத் தொடர்கிற சில முக்கியமான பிரச்னைகள் ஆண்கள், பெண்கள் இருவருக்குமே உண்டு. சில பிரச்னைகளை சாதாரண சிகிச்சைகளின் மூலம் சரி செய்து, குழந்தைப் பேற்றுக்கு வழி ஏற்படுத்த முடியும். சிலவற்றுக்கு செயற்கை முறை கருத்தரிப்பு சிகிச்சைகளே தீர்வாகும்...’’ என்கிற டாக்டர் ஜெயராணி, முதலில் பெண்களை பாதிக்கிற அத்தகைய பிரச்னைகளைப் பற்றிப் பேசுகிறார். குழந்தையின்மைக்குக் காரணமான இந்தப் பிரச்னையை Genetic Infertility என்கிறோம். குழந்தையில்லாத பெண்களில் 5 சதவிகிதத்தினரைப் பாதிக்கிற இதில் முக்கியமான 5 காரணங்கள் உண்டு.
1.டர்னர்ஸ் சிண்ட்ரோம் (Turners Syndrome)
ஒவ்வொரு பெண்ணுக்கும் 46 XX குரோமோசோம்கள் இருக்க வேண்டும். சிலருக்கு 45 X குரோமோசோம்கள் இருக்கலாம். எக்ஸ் குரோமோசோமில் ஏற்படுகிற இந்த அசாதாரணம் காரணமாக, பிறக்கும்போது அந்தப் பெண் குழந்தைக்கு கருப்பை இருக்கும். ஆனால், சினைப்பை இல்லாமலோ அல்லது சினைப்பை இருந்தாலும் அதனுள் கருமுட்டைகளே இல்லாமலோ இருக்கும். அதனால் கருப்பை வளர்ச்சி குறைந்து காணப்படும். அதன் தொடர்ச்சியாக அந்தப் பெண்ணின் ஹார்மோன் செயல்பாடுகளிலும் மாற்றம் இருக்கும்.
பிறக்கும்போதே அந்தக் குழந்தையின் தோற்றத்தில் சில வித்தியாசங்களை வைத்து இதைக் கணிக்கலாம். உதாரணத்துக்கு அந்தக் குழந்தையின் கழுத்து குட்டையாகவும், உயரம் குறைவாகவும், விரல்களில் வித்தியாசமாகவும் இருக்கும். கருமுட்டையே இல்லாத நிலையில் அந்தப் பெண் பின்னாளில் எப்படிக் கருத்தரிக்க முடியும்? இவர்களுக்கு கருமுட்டை தானம் பெற்றுத்தான் கரு உருவாக்க முடியும்.
2.FSH Beta Subunit ஜீன் குறைபாடு
இதுவும் பரம்பரையாக ஒரு பெண்ணைத் தாக்குகிற பிரச்னைதான். பெண் உடலில் FSH மற்றும் LH என இரண்டு ஹார்மோன்கள் இருக்கும். கருமுட்டை வளர, FSH ஹார்மோன் அவசியம். FSH மற்றும் LH ஹார்மோன்களின் அளவில் வித்தியாசம் ஏற்படுவதும், இன்னொரு முக்கிய ஹார்மோனான ஈஸ்ட்ரோ
ஜெனில் கோளாறுகள் ஏற்படுவதும்கூட கருத்தரிக்காமைக்குக் காரணங்களாகலாம்.
ஈஸ்ட்ரோஜென் பாதிப்பின் விளைவாக மார்பகங்கள் வளர்ச்சியின்மை, கர்ப்பப்பை கோளாறுகள் போன்றவை ஏற்படலாம். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஹார்மோன் சப்ளிமென்ட்டுகள் கொடுத்துதான் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். அதன் பிறகு கருத்தரிக்கும் வாய்ப்புகளை அதிகரிக்கச் செய்யலாம்.
3.Aromatase G கோளாறு
மரபணுக் கோளாறுகளில் இதுவும் ஒன்று. இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கருமுட்டைகள் வளர என்னதான் ஹார்மோன்கள் கொடுக்கப்பட்டாலும் வளர்ச்சி இருக்காது. இவர்களை Poor Responders என்று அழைக்கிறோம். அரிதாக சில பெண்களுக்கு இந்த ஜீன் இருக்கும்போது, அதிக அளவில் ஹார்மோனைக் கொடுத்து முட்டை வளர்ச்சி்யைத் தூண்டச் செய்வோம். அப்போதுதான் ஓரளவுக்காவது முட்டைகள் வளரும். ஹார்மோன்கள் கொடுத்தும் பலனின்றிப் போனால் மாற்று மருத்துவ முறைகளை முயற்சி செய்ய வேண்டியிருக்கும். அதிக அளவிலான ஊசிகள் செலுத்தப்படும்.
4. ஃபோலிக் அமிலக் குறைபாடு
சில பெண்களுக்கு ஃபோலிக் அமில உற்பத்தியிலேயே பிரச்னைகள் வரலாம். அதாவது, ஃபோலிக் அமிலத்தை உற்பத்தி செய்கிற ஜீனில் கோளாறுகள் இருக்கலாம். இவர்களுக்கு வைட்டமின் பி 12 மற்றும் ஃபோலிக் அமில சப்ளிமென்ட்டுகளை கொடுத்து கருத்தரிக்கும் வாய்ப்பை அதிகரிக்கச் செய்யலாம்.
5.Thrombobillia
அடிக்கடி ஏற்படுகிற கருச்சிதைவு அல்லது கருத்தரிப்புக்கான சிகிச்சைகள் தொடர்ந்து பலனற்றுப் போவது ஆகியவற்றின் பின்னணியில் Thrombobillia என்கிற பிரச்னை இருக்கலாம். இதை Implantation Failure என்றும் சொல்கிறோம். ரத்தம் உறைகிற பிரச்னையான இதன் விளைவால் கரு பதிந்து வளர முடியாமல் போகும். இவர்களுக்கு ரத்தம் உறையாமலிருக்கச் செய்கிற மருந்துகளையும் சிகிச்சைகளையும் கொடுத்து தான் கரு பதிந்து வளர ஏதுவான சூழலை உருவாக்கித் தர முடியும். இவை எல்லாம் பெண்களின் கருத்தரிப்பைப் பாதிக்கிற மரபியல் பிரச்னைகள். இதே போன்ற பிரச்னைகள் ஆண்களுக்கும் உண்டு.
பிரச்னைகளே இல்லை... ஆனாலும் பிரச்னை!
நன்றி குங்குமம் டாக்டர்
குழந்தையின்மைக்காக சிகிச்சைக்கு வருகிற பலரும் புலம்புகிற ஒரு விஷயம்...‘நிறைய டாக்டர்களை பார்த்துட்டோம். ரெண்டு பேருக்கும் எந்தப் பிரச்னையும் இல்லைங்கிறாங்க. பிரச்னையே இல்லைன்னா இந்நேரம் குழந்தை பிறந்திருக்கணும்தானே? அப்புறம் ஏன் அதுல தாமதம்?’ என்பது.பிரச்னையே இல்லாததுதான் பிரச்னையா? கருத்தரிப்பதில் தாமதம் ஏன்?
- விளக்குகிறார் மகப்பேறு மருத்துவர் ஜெயராணி.
‘‘உண்மைதான்... எல்லாமே நார்மல் என்றால் அவர்களுக்குக் குழந்தை உண்டாகியிருக்க வேண்டும். ஆனால், ஏதோ ஒரு காரணத்தினால் அவர்கள் இன்னும் கருத்தரிக்கவில்லை. பொதுவாக இதுபோன்ற நேரங்களில் அடிப்படைப் பரிசோதனைகளை செய்துவிட்டு, எல்லாம் நார்மல் என்று வந்தால் சிறப்பு பரிசோதனைகளை மேற்கொள்ள பரிந்துரைப்போம்.இதன்படி, குழந்தை இல்லாத பட்சத்தில், கணவன் - மனைவி இருவருமே பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு, சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். மனைவிக்கு பரிசோதனை செய்கையில் கீழ்க்கண்ட நான்கு விஷயங்களை முக்கியமாகக் கவனிக்க வேண்டும்.
1. கர்ப்பப்பையின் உள்பக்கமும், வெளிப்பக்கமும் ஆரோக்கியமாக இருக்கிறதா என பார்க்க வேண்டும். உள்புறம் கட்டியோ, சதை வளர்ச்சியோ(Polyp)
அல்லது தடுப்புகள்(Septum) போன்றவையோ இருக்கக் கூடாது. கர்ப்பப்பை சரியான நீள, அகலத்துடன் இருக்க வேண்டும்.
2. கரு இணைக்குழாய் ஆரோக்கியமாகவும், அடைப்பின்றியும் இருக்க வேண்டும்.
3. சூலகம் என்கிற முட்டைப்பை மாதம் ஒரு கருமுட்டையை சுழற்சி முறையில் வெளியேற்ற வேண்டும்.
4. கரு முட்டை உற்பத்திக்கான ஹார்மோன் சுரப்புகள் எஃப்.எஸ்.ஹெச்., எல்.ஹெச், டி.ஆர்.எல்., தைராய்டு போன்றவை சரியான விகிதத்தில் இருக்க வேண்டும்.ஏன் கருத்தரிக்கவில்லை என்பதை 90 சதவிகித தம்பதியருக்கு மிகச் சரியாக ஒரு மாத ஆய்வில் கண்டுபிடித்துச் சொல்லிவிட முடியும்.
கருத்தரிக்காத பெண்கள் கட்டாயம் மேற்கொள்ள வேண்டிய பரிசோதனைகளை உரிய நேரத்தில் செய்தாக வேண்டும். அதன்படி...
*மாதவிடாயான இரண்டாவது நாளில் ஹார்மோன் சோதனையும், பெல்விக் ஸ்கேன் சோதனையும்.
*மாதவிடாயான ஏழாவது நாளில் ஹெச்.எஸ்.ஜி. மற்றும் எக்ஸ்ரே.
*மாதவிடாயான 21-வது நாளில் எஸ்.பி.4 எனப்படுகிற சீரம் புரொஜெஸ்ட் ரோன் சோதனை.
*மாதவிடாயான 7-வது நாள் தொடங்கி, கருமுட்டையின் சரியான வளர்ச்சியை ஸ்கேன் மூலம் தெரிந்து கொள்ளும் ஃபாலிகுலர் ஸ்டடி.
கருமுட்டை சூலகத்திலிருந்து வெளிவரும் நிகழ்ச்சிக்கு, சினை முட்டை வெளிவருதல்(Ovulation) என்று பெயர். அந்த நேரத்தில் என்டோமெட்ரியம் எனப்படுகிற திசுவானது 8 மி.மீ. அளவு வளர்ச்சியுடன் இருந்தால்தான், உருவான கருவானது கருப்பையில் பதியும்.இப்படி எல்லாவற்றையும் பார்த்து, எல்லா பரிசோதனை களும் நார்மல் என்று தெரிந்தால், டயக்னாஸ்டிக் ஹிஸ்ட்ரோ லேப்ராஸ்கோப்பி(Diagnostic Hystero Laproscopy) என்கிற மைனர் அறுவை சிகிச்சையை செய்ய வேண்டியிருக்கும். கர்ப்பப்பையின் கழுத்துப் பகுதியான செர்விக்ஸில் புண் ஏற்பட்டு, விந்தணு செல்கிற பாதை குறுகலாக இருந்தாலும் குழந்தைப் பேறு உண்டாவதில் தாமதமாகலாம்.
மனைவிக்கு மட்டுமே சோதனைகளும், சிகிச்சைகளும் அவசியம் என நினைக்காமல், கணவனும் அவற்றுக்குத் தயாராக வேண்டும். ஆணுக்கு விந்தணுப் பரிசோதனை அவசியம். விந்தணு எண்ணிக்கை, குறைந்தபட்சம் 20 மில்லியன் இருக்க வேண்டும். அதில் 50 சதவிகிதம் வேகமான, உந்து சக்தியுள்ள உயிரணுக்களாக இருக்க வேண்டும். சில நேரங்களில் விந்தணுக்களின் எண்ணிக்கை போதுமானதாக இருந்தாலும், அந்த விந்தணுக்களுக்கு கருமுட்டையை கருத்தரிக்கச் செய்கிற சக்தி இருக்காது. அதற்கும் சிறப்புபரிசோதனைகளும், சிகிச்சைகளும் அவசியம்.எனவே, மனம் தளராமல் சிறப்பு சிகிச்சைகளுக்கு உங்கள் கணவருடன் தயாராகுங்கள். மருத்துவம் நாளுக்கு நாள் முன்னேறிக் கொண்டிருக்கிற இன்றைய உலகில் குழந்தைப் பேறு என்பது எட்டாக் கனியே இல்லை. கவலை வேண்டாம்!’’
கருத்துகள்
கருத்துரையிடுக